ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு

ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு


ஸ்ரீ பெரியமுத்து நாடாருக்கு அணைஞ்சபெருமாள் நாடார் என்ற கருணையானந்த சுவாமிகள் பிறந்தார். மங்கல்ரேவில் யோகிபுருடனின் வாக்கியப் பலிதமே என்று எண்ணலானார். மிக்க லட்சணமும், நல்ல தேஜஸும், அருள் அமைந்த கண்களும் அமையப்பெற்று பார்ப்போர் உள்ளம் கவரும் தோற்றத்துடன் விளங்கிய கருணையானந்தத்தின் திருமுக நிலா விலாசம் தாய், தந்தையரின் அகத்தின் கண்ணின்று எழும் ஆனந்தக் கடலைப் பொங்கித் ததும்பும்படி செய்தது. கருணையானந்தர் தமது தந்தையாரின் அகண்ட ஐஸ்வர்யப் பெருமையில் வளர்ந்து வருவதாயினர். சிறு தேருருட்டி தெருவில் நடை பயின்று சிறுவருடன் ஓடி விளையாடி வளர்ந்து வரும் பருவம் ஐந்து அடைந்தபின் சிறுவருடன் பாடசாலை சென்று படித்து வந்தார். நற்குணமும், தெய்வ பக்தியும், அடக்கவொடுக்கமும் அவரிடம் இயல்பாகவே வளர்ந்து வந்தன. சுமார் 12 வயதுக்குள் கற்க வேண்டியவைகளைக் கற்று தமது குலத்தொழிலாகிய வியாபார முயற்சிப் பழக்கச் சிற்றாள் முறையில் பேரையூர் கடை சென்று தொழில் பார்த்து வந்தார். சித்தர் தரிசனம்
கருணையனந்தர் தம் 13வது வயதில் ஒரு நாள் கடையிலிருந்து மாலை வேளையில் சாலிசந்தைக்கு வந்து கொண்டிருக்கும் போது ராமன் மடத்தின் பக்கம் ஒரு சித்தர் காவியுடை அணிந்த பொன்மேனியும், கருணையானந்தமே விளங்கிக் கொண்டிருக்கும் திருக்கண்களும் தவப் பெருமையைத் துலக்கம் சடாபரமும் ஒளிவைக் கொண்டிருக்கும்படியாக ஒரு தெய்வீக சன்யாசியாக இருக்கக் கண்டார். சன்யாசியார் தம்திருக்கண்களால் கருணையனந்தரைப் பார்த்தருள 'பையா கிட்ட வா' என்று மூன்று முறை அழைத்தார். கருணையானந்தர் சித்தர் முன் சென்று வணங்கி நின்றனர். சித்தர் உடனே தம்மிடம் உள்ள ஒரு ஏட்டை கருணையானந்தரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார். அ கருணையானந்தர் வீடு சென்று தான் கற்றுக் கொண்ட கல்வியின் சக்திக்கு ஏற்றபடி ஏட்டிலுள்ள விஷயங்களைத் தெரிந்து கொண்டு வந்தனர். தான் தெரிந்து கொண்டதை வேறு எவருக்கும் சொன்னதாகத் தெரியவில்லை. கருணையானந்தர் சித்தம், ஏட்டிலுள்ள ஞான விஷயங்களிலும், மந்திரங்களிலும் படிப்படியாய் பற்றுதலாகி தொழில் கவனம் இல்லாமலும் உணவின் பேரில் விருப்பம் இல்லாமலும் ஆக்கியது. ஒருநாள் தமையன் வேல் முருக நாடாரின் மனைவி சாப்பிடும்படி பலதடவை சொல்லியும் கவனியாமல் ஏட்டைப் பார்த்தப்படியே இருந்தார். அவர் தன் நாயகன் வந்தபின், அவரிடம் சொல்ல, அவர் தம்பியின் பக்குவ மகிமையையும் ஏட்டின் மகத்துவத்தையும் சிறிதும் எண்ணாமல் தம்பியின்கையிலுள்ள ஏட்டைப் பறித்துக் கிழித்து விட்டார். உடனே கருணையானந்தரின் உள்ளம் பிரமிப்படைந்து பேதப்பட்டு அதுவே ஏக்கமாயிருந்து இரத்தக் காச பிணியைக் கொண்டு வந்தது.

பிணி
கருணையானந்தர் தமது 15வது வயதில் பிணிவசப்பட்டு வருந்தினார். வருந்திய போதிலும் வேறு விஷயங்களில் புத்தி செல்லாமல் சித்த நாதர் தரிசனமே உள்ளத்தில் நிற்க கிழிபட்டஏட்டிலிருந்து பாடமான பாடல்களையும், வாக்கியங்களையும் மந்திரங்களையும் சொல்லிக்கொண்டு படுக்கையிலிருந்து வந்தனர். தங்கள் குடும்பம் யாவரும் வந்து காணும்படியான செல்வங்கள் வாய்த்து, பெரிய குடும்பமாக, தயாளகுணப் பிரபுவைத் தலைமையாகக் கொண்டிருந்தமையால், அறிவிற்சிறந்த பெரியோர்கள், வித்வான்கள் வந்து பற்பல வசனங்களைப் பேசிப் போவார்கள். பெயர் பெற்ற கவிஞர்கள் வந்து இராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் முதலியவைகளைப் படித்து பிரசங்கம் செய்வார்கள். கருணையானந்தர் அவர்கள் சொல்லி வருகிற நூற் பொருட்சாரங்களைக் கவனித்து நூற்களின் நுட்பொருள்களை நோக்கி வருவார். பெரியமுத்து நாடார் திருமனைச் சபையில் கல்வி வாசகம் கமழ்ந்து கொண்டேயிருந்தது. இவ்வித வித்வான்களில் கல்போது பிச்சு ஐயரும், திருமலைக் கொழுந்தும் சிறந்தவர் ஆவர். பேரையூர் சமஸ்தான வித்வான் அஷ்டாவதனம் பொன்னுங்குடஞ் செட்டியார் அவர்கள் காலம் பிற்காலமாய்த் தெரிவதால் அவர் மரபினரும் மேற்படி வித்வ கோஷ்டியில் கலந்திருக்கலாம்.
பெரியமுத்து நாடார் தமது அருமை மகன் கருணையானந்தம் பிணி வாய்ப்பட்டிருப்பதை எண்ணி பலவாறு சிந்தித்து பேரையூர்க் கடையில் கருணையானந்தம் செய்து கொள்ளும் செலவுக்கு கேட்டப்படி கொடுக்க வேண்டும் என்று தொழில் தலைமையாளரிடம் உத்தரவு செய்திருந்தார். அவர் அப்படியே கொடுத்ததைப் பெற்று உடல்நிலைக்கு ஏற்றவாறு சிற்றுண்டிப் பொருட்களை வாங்கி அருந்துவதுடன் சாது சங்கங்களுக்கும் உதவுவார். சன்மார்க்கத்தையே விரும்பினார். தந்தை அவரை அழைத்து 'மகனே! நீ திருப்பரங்குன்றம் 21 கார்த்திகை சென்று வடிவேல் பெருமான் தரிசனம் செய்துவரின் உற்ற பிணி நீங்கும்' என்று உரைத்தனர். கருணையானந்தர் அப்படியே செய்வோம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பரதேசியார் பிணியின் தன்மையைத் தெரிந்து 'தங்க பஸ்பம் தருகிறேன். சாப்பிடுவாய்' என்று பஸ்பத்தைக் கொடுக்கச்சென்றார். ஆனால் தந்தையார் தங்க பஸ்பம் சாப்பிட அனுமதி தரவில்லை. திருப்பரங்குன்றம் போய் வருமாறு சொன்னார்.

தெய்வ சேவை
கருணையானந்தர் உடலில் பரவிய காசநோய் முற்றுதலாகி உணவு செல்லாது நித்திரை நேராது. வேதனை உண்டாக வருந்தி தந்தை சொற்படி தெய்வதரிசனம் செய்வோம் என்பதாய் சித்தத்திற் கொண்டு தந்தை அனுமதி பெற்று வேலையாட்கள் டோலியில் வைத்து சுமந்து வர திருப்பரங்குன்றம் சென்றார். அங்கு குருபாத மடத்தில் தங்கியிருந்த சுவாமிதரிசனம் செய்து வந்தார். அருட்கவி பிரசாத இராமலிங்க சுவாமிகள் கூறியவண்ணம் ஆறுமுகக் கடவுளை இடைவிடாமல் துதித்து நின்று அங்கம் எல்லாம் உருகத் துதித்தும், ஊர் வந்தும் சென்றும் மாதக் கார்த்திகைகள் தலயாத்திரை நடந்து வருங்கால் மெய்ப்பிணி தீர்வதற்கு இன்றியே இருந்தது. கருணையானந்தர் இது ஜென்ம வினைத் தொடர்பாக இருக்கின்றது என்பதாய்க் கருதி இந்நோயைத் தாங்கி இருப்பதிலும் இறப்பதே மேல் என்று எண்ணினார். காலையில் சரவணப்பொய்கையில் வீழ்ந்து மடிவோம் எனக்கருதி குருபாத மடத்தில் சயனித்திருந்தார். அன்று அவருக்கு நல்ல நித்திரை ஏற்பட்டு சூர்யோதயம் வரை நன்றாகத் தூங்கிவிட்டார். விடிந்து எழுந்து பார்க்கும் போது, இரத்தக் காசப்பிணி சற்று மாறுதலாகி வேதனை தீர்ந்து நடக்கலான தன்மையில் வந்தது. ஆனால் நோய் முற்றும் தீர்ந்து விடவில்லை. காலையில் ஆறுமுகப்பெருமான் திருவருளைச் சிந்தித்து சாகும் எண்ணத்தைத் துறந்து சரவணப் பொய்கையில் நீராடிச் சந்நிதியில் சென்று இரு கரங்களையும் சிரமேற் குவித்து அருட்பாட்களை ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட, உடல் சிலிர்க்க என்பு உருகப் பாடித் துதித்து திருவருட் பிரசாத மகிமை பெற்று பாத சாரியாய் நடந்து தங்கித் தங்கி இருந்து சாலிச்சந்தை வந்து சேர்ந்து தந்தை தமையன்மாரை வணங்கி பிணியின் தன்மையைத் சொல்லி இனிதாய் இருந்தார்.

மணற்குளம் சாயபு
- மணற்குளம் சாயபு மணற்குளம் என்னும் ஊரில் வசித்து வந்தவராவர், வேதாந்த சாஸ்திரங்கள், யோக சாஸ்திரங்கள் நன்கு தெரிந்து பிரப்பிரம ஜோதிச் சொரூப நிலையில் மனநிலை புதிய யோக முறையில் இருந்து வந்தவராகத் தெரிய வருகிறது. இவர் பேரையூரில் காடி ராவுத்தர் என்னும் ஒரு கனவான் மனை வந்தனர். அவர் மகிமையை முன்னமே தெரிந்திருந்த கனவான் அவரை மிகவும் போற்றுதலாய் வைத்திருந்தார். பேரையூர் சுற்றுப்புறங்களில் உள்ள கல்விமான்கள், ஞானிகள், பிரபுக்கள் முதலானவர்கள் சென்று கண்டுகொண்டனர். நமது கருணையானந்தரும் செல்வாருடன் சென்று அப்பெரியார் தரிசனம் பெற்றனர். சாயபு கருணையானந்தர் திருமுக விலாசத்தையும்,
லட்சணத்தையும் அடக்க ஒடுக்க நிலையினையும் கண்டு, பிரபுவாய் விளங்கும் பெரியமுத்து நாடாரின் மகன் என்பதையும் பக்கத்துள்ளார் வாய்மொழியால் தெரிந்து பிணி பரவிய உடலினையும் குறிப்பினால் அறிந்து கருணை கூர்ந்து, இதனைத் தரித்துக் கொள்வாய் என்று தாம்பூலம் தந்தனர். கருணையானந்தர் உடனே இரு கரத்தாலும் வாங்கி தரித்துக் கொண்டனர். தரித்தவுடன் சுமார் 5 வருட காலமாய் உடல் எல்லாம் வியாபித்து இருந்த காச நோயும் பற்றற நீங்கியது போல் காணப்பட்டது. கருணையாந்தருக்கு உள்ளம் கனிந்து ஞான சிந்தையும் உதித்தது. தன் வாசம், சாலிச்சந்தை, பேரையூராகிய இரண்டு இடவாசம் ஆனதால் சாயபுவிடம் தினமும் சென்று பணிந்து அரிய உபதேசங்களைப் பெற்று வருவதாயினர். பெரியமுத்து நாடார் சாயபுவின் மகிமையையும் மைந்தன் பிணி நீங்கப் பெற்று பக்தியோடு நடந்து வருவதையும் தெரிந்து கொண்டு அவர் இருப்பிடம் சென்று அன்பான வார்த்தைகளால் பேசி, தமது இடத்திலும் வந்து போயிருக்க உணவுக்கு வேண்டிய பொருட்களையும் கொடுத்து அவருடைய சகவாசமும் வைத்துக் கொண்டார்.
முற்காலங்களில் இப்பிரதேசத்தை ஆட்சி செய்த கன்னடியர் குடும்பத்தைச் சேர்ந்த லிங்கையர் என்னும் வீரசைவர் ஒருவர் இருந்தார். அவரை அல்லமாப்பிரபுலிங்கையர் என்றும் சொல்வார்கள். அவரும் நாடார் குடும்பங்களுக்கு ஓர் குலகுருவைப் போல் இருந்து வந்தார். கருணையானந்தமும் இவரிடம் சிறிது பிராயம் முதல் பழகி வந்தால் அவர் வாக்கியங்களும் மிக்க திட வீர பக்குவ ஞான நிலையை உறுதிபடுத்தியது. கருணையானந்தர் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலுள்ள தலங்களில் யாத்திரை செய்தார். பாசூர் குருக்களிடம் அனுஷ்டான முறையைப் பெற்றுக் கொண்டதுமன்றி அவ்வகையினர் இருக்கும் இடம் சென்று சில நாட்கள் தங்கியும் வருவார். அக்காலம் அவருக்கு வயது 20. திருமணம்
கருணையானந்தர் பிரபஞ்ச பற்றுகளில் புலன்களைச் செல்லவிடாது தீவிர பக்குவ நிலையில் இருந்து வரும்பொழுது தந்தையார், தமையனார் முதலானோர் விவாக காரியத்தை விரும்பினர். அதற்கு கருணையானந்தர் முதலில் இசையவில்லை என்றாலும் மணற்குணம் சாயபு முதலியோரின் நற்போதையினால் சம்மதித்தார். சிவகாசியில் ஒரு தனவந்தரின் புதல்வி கருப்பாயி என்னும் பெண்ணை மணமுடித்து வைத்தனர். இது காலம் கி.பி. 1825-30 ஆன இருக்கலாம். விரக்தி - பெரியமுத்து நாடார் தமது 96வயதில் இகலோகம் நீத்துப் பரலோகம் எய்தினர். கருணையானந்தர் தனது சகோதரர்களுடன் தந்தைக்குச் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தப்பின் குடும்ப காரியத்தை தமையன்மார்களுடன் சேர்ந்து பார்த்து வந்தார். ஆனால் சித்த விருத்தி பிரம்மஞானத்தில் பற்றுதலாகவே இருந்து வந்தது. தாம் பார்க்க வேண்டிய குடும்ப காரியங்களையும் செவ்வனே கவனித்து வருவார். ஏவலாளிடத்தோ ஏனையோரிடத்தோ தோன்றுகிற நியாயங்களையும், தவறுகளையும், தெரிந்து அவர்களுக்கு சன்மார்க்கங்களைப் போதிப்பார். இக்காலம் தூத்துக்குடி துறைமுகம் ஏற்றுமதி, இறக்குமதியாகி சீமை தேசங்களுக்குப் பஞ்சுப் பொதிகள் இந்தியாவிலிருந்து சென்று கொண்டிருந்தமையால் வண்டிகளில் கையரவைகளால் அரைக்கப்பட்ட பஞ்சப் பொதிகளை ஏற்றி அனுப்பிய விவரங்கள் நடந்து கொண்டிருந்தன. ஏவலர்கள், சகோதரர்கள் இவர்களால் வியாபாரம் நடந்து வந்தன. இவர் சிந்தை பரத்திலேயே படிந்து கொண்டிருந்தது. இரவு காலம் தமது திருமனையுள்ளிடத்தில் யோக நிஷ்டையில் இருப்பார். அவரது மனைவி கருப்பாயி கணவனின் பக்குவத்திற்குத் தகுந்தபடி பணிவிடைகளை சலிப்பின்றி செய்து வந்தார். அவ்விதம் இருவரும் இல்லறம் நடத்திவரும் காலத்தில் மகாலிங்க நாடார், புன்னவனச்சங்கு நாடார், சித்திவிநாயக நாடார், கந்தசாமி நாடார், பெரியமுத்து நாடார் என்னும் 5 மைந்தர்களும், மருதம்மாள், விசாலாட்சி, அபிராமி, மீனம்மாள் என்று 4 பெண்களும் உதித்தனர். இவ்வாறு கருணையானந்தம் பிரபஞ்சத்தில் ஈடுபட்டிருப்பினும் மனநிலை மாயைச் சேற்றில் அமிழாது திட நிலையிலேயே நின்று வந்திருக்கின்றது. புலச்சேட்டைகளால் பக்குவநிலை கெட்டு விடாது ஞான பக்குவத்திலேயே இருந்து வந்தார்.

அற்புதம்
இவ்வாறு கருணையானந்தர் பொருளாட்சி ஆகிய இரண்டிற்கும் உடையவரா பல் வருடங்கள் வாழ்ந்து வந்தனர். அவரிடம் சிலர் உபதேசம் கேட்டு வந்ததாகவும் தெரிகின்றது. இவர் பருவம் சிறிது முதுமையாக இளைய மகன் பெரியமுத்து வாலிப தசையை அடுத்து மைந்தர் ஐவரில் பெரியமுத்துதான் சிறந்த படிப்பாளி. பள்ளிப் படிப்புத் திறந்ததால் பாரத, இராமாயண இதிகாசங்கள், பல புராணங்கள், இலக்கண இலக்கியங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்று வருபவர். மேலும் வேதாந்த சாஸ்திரங்கள் கற்று தந்தை அடையும் சக்தி நிலை அடைவதற்கு விரும்பினார். ஆனால் கருணையானந்தருக்கு மகனுடைய மனநிலை போக்கும் இதற்குரிய பக்குவம் இல்லை என்பது தெரியும். ஒருநாள் தன் இளைய மகன், பெரியமுத்துவுடன் சாலிச்சந்தைக்குத் தென்பால் 3 மைல் தூரத்தில் இருக்கும் திம்மநாயக்கன்பட்டி என்ற ஊருக்குச் செல்லும்படி நேர்ந்தது. அன்று அம்மாவாசை தினம், சூரியன் அஸ்மித்து ஐந்து நாழிகைக்கு மேல் (2 மணி நேரம்) இருக்கும். நல்ல இருட்டாக இருந்தது. பெரியமுத்து வழக்கம்போல் தந்தையிடம் எனக்கு உபதேசம் செய்தருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டே வந்தார். தந்தைய யாதொன்றும் பேசாது சென்றார். உடனே கீழ்த்திசையில் சந்திரோதயம் போன்று ஒருஜோதி தேற்றமானது. அதனை கண்ட பெரியமுத்து தந்தையின் மகத்துவம் என்று அறிந்து அகத்திற் கொள்ளாதபடி இன்று அம்மாவாசையாக இருக்க நிலா தோன்ற வேண்டிய காரணம் யாது? என்று கேட்டார். அவர் மகனின் அமைதி இன்மையை அறிந்து பேசாது நடக்க நிலாத் தோற்றமும் மறைந்து சிறிது தூரம் சென்ற பின் மழை பெய்ய ஆரம்பித்தது. மழைத்துளி இவர்கள் பேரில் விழாது சுற்றி வழைத்து கொண்டே பெய்தது. உடல் நுகில் நனையாது சென்றனர். பெரியமுத்து அதனையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் முன்போல் கேட்க கருணையானந்தம் முன்போல் பேசாது சென்றார். திம்மநாயக்கன்பட்டி சென்று போன காரியத்தை முடித்துக் கொண்டு வந்தனர்.
ஒரு நாள் கருணையானந்தர் தனது மனையில் இருக்கும் பொழுது அழகம்மாள் என்ற ஓர் மங்கை அழுத கண்ணும், வருந்திய சிந்தையும், உடையவளாக வந்து வணங்கி நின்று பிரவுவே தங்கள் இளைய மகன் மாட்டினை விடுத்து எனது புஞ்சை வரகு மகசூலை அழித்து விட்டனர். யான் என் செய்வேன்? என்று கூறுனாள். கருணையானந்தம் இரக்கம் உடையவராய் உனது நிலத்தில் இயல்பாய் எத்தனை பொதி வரகு விளையும்? என்று வினவினார். அவள் மூன்று பொதி விளையும் என்றனள் அதற்கு அவர் இவ்வருடம் இரட்டிப்பு விளையும் போய் வருவாய் என்று கூறி அனுப்பி விட்டார். அப்படியே அவளுக்கு ஏழு பொதி வரகு விளைந்தது. என்று சொல்வார்கள்.
சுப்புலாபுரம் என்னும் கிராமத்தில் வசிக்கும் ரெட்டியார் ஒருவர் ராஜபிளவை என்னும் நோயால் வருந்தி அவ்வூர் நாயக்கர் ரணவைத்தியத்தால் நோய் குறையாமல்ல அதிகமாகி கொடிய வேதனையைக் கொடுத்தது. அதனைப் பார்த்து சகிக்க முடியாத அவர் கற்றத்தார்கள் கருணையானந்தர் மகிமையைத் தெரிந்தவர்களான படியால் பிணியாளரை கட்டிலின் மேல் கொண்டுவந்து சாலிச்சந்தை கருணையானந்தம் திருமனை முன் வைத்துவிட்டு சென்று விட்டனர். காலையில் எழுந்து வந்த கருணையானந்தர் பிணியாளரை நோக்கி குரு முன்னிலையில் பெற்றுள்ள மந்திரத்தை ஜெபித்து பசு வெண்ணையைத் தம் திருக்கரங்களால் தடவியபோது நோயின் வேதனை நின்றது. கொஞ்ச நாளில் படிப்படியாக அப்பெருநோய் மாறியது. சுகமடைந்த ரெட்டியார் கருணையானந்தரை பலதரம் பணிந்து அவரது ஆசிபெற்று தனது ஊர் அடைந்தார். இவ்வித பணியாளருடன் அரவு தீண்டப்பட்டவர்களும் வந்து சுகமடைந்து போனார்கள்.
கி.பி.1862ல் கருணையானந்தரின் தர்மபத்தினியாகிய கருப்பாயி அம்மாள் பரலோகம் அடைந்தனர். இப்புனிதவதி இருக்கும் வரையில் சக செல்வமும் குறைவின்றி நிறைந்திருந்ததென்றே சொல்வார்கள். 1885ல் பஞ்சுப் பொதி விலை ஏற்றமாகி திடீரென்று
இறங்கி விட்டமையால் வியாபாரிகள் நஷ்டமடையலாயினர். ஆயிரக்கணக்கான ரூபாயில் பெரும்படியான பஞ்சு வாங்கி வைத்திருந்த கருணையானந்தர் குடும்ப நிதியும் நஷ்டத்தில் கொண்டு விட்டது. ஆடு, மாடு, நிலம், நகை நாணயம் முதலியவைகள் இடம் பெயரும்படி ஏற்பட்டது. சமாதி
தனது மனைவியின் மரணம் செல்வத்தில் பின்னேற்றம் இவற்றால் கருணையானந்தர் சித்தம் வருந்தவில்லை. தனக்கு அந்திம காலமும் அடுத்து படுக்கையில் இருந்தார். கி.பி. 1874ல் தனது அந்திமக் குறிப்பைத் தெரிந்து கொண்டு தன் பக்கம் நின்ற இளைய மகன் பெரியமுத்துவை நோக்கி சந்தன செட்டியாரை அழைத்து வருவாய் என்றார். அவர் அப்படியே அழைக்கச் சென்ற இடத்தில் இளைஞர்களுடன் சீட்டாட்டத்தில் இருந்து விட்டார். பின்பு மகாலிங்க நாடார் மகன் குமாரசாமியிடம் செய்தியை சொல்லி அழைத்து வரும்படி சொல்ல அவர் சென்று பெரியமுத்துவை அழைத்துக் கொண்டு வந்தனர். வந்து நின்ற பெரியமுத்துவை நோக்கி நீயும் அழைக்கவில்லை; சந்தனஞ் செட்டிக்கு லபியுமல்லை என்று கூறி ஆத்மா பிரம்ம சைதன்யத்தில் கலந்தது. உறவின்முறை மற்ற இனங்களும் நிறைந்து மிக விமர்சையாகக் கூடி திருவுடல் சமாதி வைக்கப்பட்டது. 




சமாதி நிலையம்

சமாதி செய்யப்பட்ட இடம் சுமார் நான்கு ஏக்கர் விஸ்தீரணமுள்ள புளியந்தோப்பு ஊரையடுத்த மேல்பக்கம் பெரியமுத்து நாடார் தேட்டில் வந்து இவர்கள் பாத்தியத்திலிருந்து வரப்பட்டது. இவ்விடத்தில் எடுக்கப்பட்ட பள்ள நிலையத்தில் சேமப்பேழையில் அவர் அருளிச் செய்திருந்தபடி உப்பு, செங்கற்பொடி, விரவப்பட்டவைகளைத் திருமேனியைச் சுற்றி நிரப்பப்பெற்று அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. நாற்பது நாற்பது நாள் வரை பொங்கலிட்டு அன்னம் படைத்து பூஜை நைவேத்தியம் செய்யப்பட்டது. முன்னிருந்த புளியமரங்கள் எடுக்கப்பட்டு பின் உண்டாக்கிய மரங்களே தற்சமயம் உள்ளனவென்று சொல்வார்கள். ஆரம்பத்தில் மண் கட்டிடம் கட்டிலிங்கப் பிரதிஷ்டை செய்து தட்டைக் கூரை வேய்ந்து ஆலய வணக்கம் செய்யப்பட்டு வந்திருக்கின்றது. வடக்கம் தெப்பம், ஏரி இருக்கின்ற. தெப்பத்துக் கீழ்புரம் நந்தவனத்துறை நந்தவனத்தில் இருக்கும் விநாயகர் கருணை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். முன் சொன்ன கன்னடிய மரபு வீரபத்திரய்யர் வம்சத்தார். பூஜை செய்து கொண்டு வருகின்றனர். தினம் மூன்று காலம் பூஜை செய்யப்பட்டு வருகிறது. பிணியுற்றோர் வந்து பணிந்து வணங்கி மிளகு மந்திரித்துக் கொடுக்கப்பெற்று அருந்ததி பிணிகள் தீர்ந்து செல்கின்றனர். அன்னதானமும் வழங்கப்படுகிறது. வருடா வருடம் ஐப்பசி மாதம் பூர்வ பட்சம் திரயோதசி திதியன்று குருபூஜையும் நடைபெற்று வருகிறது. இக்குருபூஜைக்கு ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் மரபினராய் பல இடங்களிலும் இருந்து வருகின்ற நாடார் அனைவர்களும் இன்னும் மற்றவர்கள் வருகின்றனர். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று விசேஷமாய் அபிஷேகம் பூஜைகள் நடக்கும் ஆடி அமாவாசை அன்று சதுரகிரி போய் சுவாமி தரிசனம் செய்து அவ்வழியாய் வந்து தங்கும் சாதுகளுக்கு அன்னதானம் நடைபெறும். பல வருடங்களாக இவ்விசேஷங்கள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. முன்பிருந்து கூரை மண்சுவர்கள் போய் சமாதி மண்டபங்களுடன் கல் கட்டிடமாகக் கட்டப்பட்டது. மூலஸ்தானம், அர்த்தமண்டபம் ஸ்ரீ குத்தாலிங்க நாடார் அவர்கள் சாலிச்சந்தை உறவின்முறை உதவிகளாலும் புளிந்தோப்பு வருமானத்தாலும் கோபுரம் தேனி ஸ்ரீசெ.சுந்தரநாடார் வகையறாவாலும், மகா மண்டபம் பதினாறாம் கால் மண்டபம் தேனி ஸ்ரீ செ.அ.கருப்பையா நாடார் அவர்களாலும் கிணறு உசிலம்பட்டி தெ.ச.ரெ.ம.கந்தசாமி நாடார் வகையாறாவாலும் முன்னாள் இருக்கும் பழைய ஸ்கூல், புது ஸ்கூல் கட்டிடங்கள் சாலிச்சந்தை உறவின்முறை நன்கொடை, புளியந்தோப்பு வருமானம் முதலியவைகளைக் கொண்டும் கட்டப்பட்டன. மாரியப்பன் கோயில் மூலஸ்தானம் ஸ்ரீ குத்தாலிங்க நாடாராலும் மற்றவை சாலிச்சந்தை உறவின்முறையாலும் கட்டப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாறு

ஸ்ரீ குமரவிடங்க அய்யனார்