சாலிச்சந்தை ஸ்ரீ பால்பழக்காரி அம்மன்

சாலிச்சந்தை ஸ்ரீ பால்பழக்காரி அம்மன்

                                                       

வரலாறு ஆதி ஸ்ரீ அணைஞ்சபெருமாள் நாடாரின் சிரேஷ்ட குமாரர் ஸ்ரீ பெரியமுத்து நாடார் மங்கல்ரேவில் குடியிருந்து வியாபாரம், விவசாயம், கொடுக்கல் வாங்கல் முதலியன செய்து பொருளாதாரத்தில் விருத்தியடைந்திருந்த காலத்தில் தாம் அடிக்கடி வெளியூர் போவதுண்டு. அப்படிப்போகும் போகும் நாட்களில் அவரது தம்பி ஸ்ரீ மாரிமுத்து நாடார் குடும்ப காரியங்களையும், வியாபாரம் விவசாயங்களையும் மேற்பார்த்து வருவார். ஸ்ரீ பெரியமுத்து நாடார் காலப்போக்கு சூழ்நிலைகளை அனுசரித்து பேரையூர், சாலிச்சந்தை போன்ற ஊர்களுக்கு குடியேறுவதற்காகத் திட்டமிட்டு இருந்தார். அதற்கு மைக்கண் நாடான்குடி சென்று நமது குலதெய்வம் அணைஞ்ச பெருமாள் அய்யன் சுவாமியைத் தரிசித்து, உத்தரவு பெறும் நோக்கத்துடன், மாசி மாதம் திருச்செந்தூரில் உற்சவம் நடைபெறும் காலத்தில் ஒரு நாள், சகல காரியங்களையும் தன் தம்பி ஸ்ரீ மாரிமுத்து நாடாரிடம் ஒப்படைத்து விட்டு, மைக்கண் நாடான் குடி புறப்பட்டுச் சென்றார்.
அப்போது ஒரு நாள், ஸ்ரீ மாரிமுத்து நாடார் தம்பி ஸ்ரீ ராமநாத நாடாருடன் மங்கல்ரேவுக்குப் பக்கத்தில் உள்ள நில புலன்களைப் பார்த்து வரச் சென்றார். ஊருக்குப் பக்கத்தில் ஒரு புறம் பருத்தியும், மற்றொரு புறம் சோளமும் பயிராகி இருந்தன. அப்போது அந்த வழியாக ஒரு பிராமணச் சிறுமி நெடுஞ்தொலைவில் இருந்து வந்தவள் போல் ஏதோ ஒரு இடரில் அகப்பட்டு காட்டு விலங்கினால் துரத்தப்பட்டு வந்தவள் போல் தோற்றம் அளித்தாள்.
அவளுக்கு வயது சுமார் 9 இருக்கும் காதோலை கருகமணி தரித்திருந்தாள், இடது கையில் சிவப்புக் கயிறு கட்டியிருந்தாள். அவளைக் கண்ட ஸ்ரீ மாரிமுத்து நாடார் அவளைப் பிடித்து நிறுத்தினார். அச்சிறுமி நீண்ட பயணத்தினால், களைப்பினால் மயக்கமுற்றாள். ஸ்ரீ மாரிமுத்து நாடார் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார். சாதம் கொண்டு வரச் சொல்கிறேன், சாப்பிடுகிறாயா? என்று அச்சிறுமியிடம் கேட்டார். அதற்கு அவள் சாதம் வேண்டாம்; வாழைப்பழமும், பசும்பாலும் கொண்டு வந்தால் சாப்பிடுகிறேன் என்று கூறினாள். உடனே ஸ்ரீ ராமநாத நாடார் வீட்டிற்குச் சென்று தம்பி காளியப்ப நாடாருடன் பாலும் பழமும், பானகமும் கொண்டு வந்தார். சிறுமி மறுபடியும் மயக்கமுற்றாள். ஸ்ரீ மாரிமுத்து நாடார் சிறுமிக்கு பச்சைத் தண்ணீர் கொடுக்க மயக்கம் தெளிந்தாள். "இனி என் உயிர் நிற்காது. எனக்கு இவ்வளவு உபகாரம் செய்த உங்கள் குலத்தைக் காக்கும் தெய்வமாக விளங்குவேன். நான் கேட்ட பாலும் பழமும் எனக்கு வைத்து பூஜித்து வாருங்கள். என்னுடைய அந்திம காலத்தில் கொடுத்த பச்சை ஜலத்தை உங்கள் வீட்டில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு கொடுத்து வாருங்கள்; அதுவே அவர்களுக்கு சஞ்சீவியாக இருக்கும். இது விபரம் அனைத்தையும் உன் அண்ணன் பெரியமுத்துவின் கனவிலும் சொல்லுகிறேன்,'' என்று சொல்லி அந்தச் சிறுமி தேக விநியோகம் எய்தினாள்.
சிறுமியின் உடலை அடக்கம் செய்து பிடிமண் எடுத்துக் கொண்டார்கள். அதே நாள் இரவில்மைக்கண் நாடான்குடியில் ஸ்ரீபெரியமுத்து நாடார் நித்திரையில் இருக்கும்போது கனவில் அணைஞ்ச பெருமான் அய்யன் சுவாமி தோன்றி பிராமணச் சிறுமியையும் மற்றும் நிகழ்ந்தவைகளைக் காட்டி, "அவள் உன் குலத்தைக் காக்க வந்தவள்," என்று கூறி அதற்கு ஆதாரமாக நமது முன்னோடி மகா காளன் வடிவமாகிய சங்கிலிக் கருப்பன்அணியும் சிவப்பு பவள அரை ஞானை சிவப்புக் கயிறாகக் கையில் தரித்திருந்ததையும் காண்பித்து மேலும், "நீ நினைத்தபடி பேரையூர் சாலிச்சந்தையிலும் இருந்து கொண்டு என்னையும் இவ்விடம் வந்து பூஜித்து அச்சிறுமியை
பால்பழக்காரியாய் அங்கு பிரதிஷ்டை செய்து பூஜித்து வர உனக்கு சர்வ சித்தியும் அருளுவோம்” என்று கூறி மறைந்தார்.
இவ்வுத்தரவை சிரமமேற்கொண்டு ஸ்ரீ பெரியமுத்து நாடார் மங்கல்ரேவுக்கு வந்து அங்கு நடந்தவைகளை கேட்டு ஆச்சரியமுற்றார். பின்பு பேரையூர் சாலிச்சந்தை வந்து பிடிமண்ணை வைத்து பாரம்பரியமாகப் பூஜித்து வந்தார்கள். சங்கிலிக் கருப்பனின் பவள் அரைஞாணின் தோற்றமாக பிறக்கும் ஆண்களுக்கெல்லாம் சிவப்பு அரைஞான் கயிறு கட்டுவதும், பிரசவித்த தாய்மார்களுக்கு பச்சைத் தண்ணீரையே கொடுப்பதும் வழக்கத்தில் இருந்து வருகின்றன. 1
சாலிச்சந்தையில் பால்பழக்காரி அம்மனை 1918ம் ஆண்டில் கும்பிட்ட பின்பு முதன் முதலாக 1960ம் ஆண்டு கும்பிடப்பட்டது. அதற்குப்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாக சிவராத்திரிக்குப் பிறகு வருகின்ற வளர்பிறையில் வரும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று கும்பிட்டு வருகின்றோம். சாலிச்சந்தையில் நம் குலதெய்வம் பால்பழக்காரி அம்மன் ஸ்ரீ சீ.பரங்கிரி நாடார் அவர்கள் வீட்டில் வீற்றிருந்து பின்பு 1962 ல் பால்பழக்காரி அம்மனுக்கு நம் புளியந்தோப்பில் கருணையானந்த சுவாமி கோவிலுக்கு தெற்கிலும், மாரியம்மன் கோவிலுக்கு மேற்கிலும் 100'-7.2' இடத்தில் கோவில் திருப்பணி, மூலஸ்தானம், திருமதில் முதலானவை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டு கட்டிட வேலைகளை நடத்தி பால்பழக்காரி அம்மனையும் புதுக்கோவிலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
திரு. S.V.K.S.சோமசுந்தர நாடார் உசிலம்பட்டி அவர்கள் அம்மன் சிலையும் உசிலை திரு. K.A.சந்தோஷ் நாடார் கோயில் கதவினையும், உசிலை திரு. S.P.கருணையனந்தம், திரு. T.RS.காந்திராஜன் கிழக்கு வாசல் இரும்புக் கதவினையும், க.வை.ச. அய்யநாடார் குமாரர்கள் வடக்கு வாசல் இரும்புக் கதவினையும் அமைத்துக் கொடுத்தனர்.
கோவில் முன்மண்டபம் சுமார் 1.75 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் நமது பங்காளிகள் அதிக அளவில் வந்திருந்து சாமி கும்பிட்டு அம்மனின் அருள்பெற்று வருகிறோம். நமது வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளும் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் வந்து சாமி கும்பிடுவது அதிகமாகி வருகிறது. இடையில் சில திருடர்களால் மூல ஸ்தானத்திலுள்ள அம்மன் சிலை உடைக்கப்பட்டது. பின்னர் ஆகம விதிகளுடன் புதிய அம்மன் சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- புதிய அம்மன் சிலை 14.9.1993 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரு. T.R.D.ரெங்கராஜன் அவர்கள் புதிய அம்மன் சிலை நிறுவ நன்கொடை கொடுத்தார்கள். 27.1.1994 ஆம் தேதி அன்ற அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் வட புற மண்டபம் கட்டி 14.3.2003 அன்று பால் காய்ச்சினோம். இடது புறமண்டபம் கட்டி 3.3.2006 அன்று பால் காய்ச்சினோம். அதன் பிறகு தற்போது 18.5.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ பால் பழக்காரி அம்மன் கோவில் சாலிச்சந்தையில் அமைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சாலிச்சந்தை பேரையூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ளது. தற்போது பேருந்து வசதிகள் உள்ளன. மதுரையில் இருந்து பேரையூர் சுமார் 47 கி.மீ தொலைவிலுள்ளது. உசிலம்பட்டியில் இருந்தும் விருதுநகரில் இருந்தும் பேரையூர் செல்ல இயலும் பேரையூருக்கு மதுரை - ராஜபாளையம் தடத்தில், கல்லுப்பட்டி வந்து சேர வேண்டும்.
அனைவரும் ஸ்ரீ பால்பழக்காரி அம்மனின் அருள் பெற்று சிறப்புப்புடன் வாழ அம்மனை வணங்குகிறோம்.




Comments

  1. பால்பழக்காரியம்மன் போட்டோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாறு

ஸ்ரீ குமரவிடங்க அய்யனார்

ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு